கார்த்திகை தீப விழாவையொட்டி மானாமதுரை அருகே விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்


கார்த்திகை தீப விழாவையொட்டி மானாமதுரை அருகே விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 13 Nov 2018 3:15 AM IST (Updated: 13 Nov 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீப விழாவையொட்டி மானாமதுரை அருகே வண்ண மெழுகுவர்த்தி விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரை,

நாடு முழுவதும் கார்த்திகை திருநாள் வருகிற 23–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த கார்த்திகை திருநாள் அன்று பொதுமக்கள் 3 நாட்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. முன்பு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது பெண்கள் ரெடிமேடாக செய்யப்படும் பல வண்ண நிறங்களினால் ஆன விளக்குகள், மெழுகுவர்த்தி விளக்குகளை பெரிதும் விரும்பி அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து கண்ணை கவரும் வண்ணம், வித விதமான ரெடிமேட் விளக்குகள் தற்போது மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் இந்த மெழுகுவர்த்தி விளக்குகள் தயாரிக்கும் பணியானது குடிசை தொழிலாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இங்கு மெழுகுவர்த்தியால் ரெடிமேட் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மஞ்சள், பச்சை, சிவப்பு, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இந்த விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 5 மெழுகுவர்த்தி விளக்குகள் கொண்ட பாக்கெட் ரூ.25 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டு அய்யப்பன் சீசன் தொடங்க உள்ளதால் விநாயகர், அய்யப்பன் தோற்றம் கொண்ட மெழுகுவர்த்தி விளக்கும், லட்சுமி குபேர விளக்கு, இதயம் வடிவிலான விளக்கு, குபேர விளக்கு, ஐந்து முக விளக்கு, ஒன்பது முக விளக்கு என பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த விளக்குகளின் வடிவத்திற்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மெழுகுவர்த்தி விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூறியதாவது:– இங்கு தயாரிக்கப்படும் இந்த வண்ண மெழுகு விளக்குகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்களை முன்பு மதுரையில் இருந்து வாங்கி வந்து தயார் செய்தோம்.

ஆனால் தற்போது சென்னை மணலியில் இருந்து வாங்கி வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். ஆண்டிற்கு 3 மாதம் மட்டும் இந்த தொழிலை செய்து வருகிறோம். மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் அரசு மானிய விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க செய்தால், இந்த குடிசைத் தொழில் செழிப்படையும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story