திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மனு கொடுக்க வருபவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே, கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு, வந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து, அதில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றினார்.

மேலும் அவருடன் வந்த பெண் மீதும் பெட்ரோலை ஊற்றி, இருவரும் தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் ஓடிவந்து அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது திண்டுக்கல் அருகே உள்ள ம.மூ.கோவிலூரை சேர்ந்த கருப்பையா (வயது 44), அவருடைய மனைவி பாக்கியலட்சுமி என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரித்துக்கொண்டு இருந்தபோது, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு காரில் வந்து இறங்கினார். அவர், தீக்குளிக்க முயன்றவர்களிடம் அதுகுறித்து கேட்டபோது, எங்கள் வீட்டுக்கு செல்ல புறம்போக்கு நிலத்தில் பொதுப்பாதை உள்ளது. இதனை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் அந்த வழியாக எங்களை செல்லவிடாமல் தடுக்கின்றனர், என்றனர்.

பின்னர் அவர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, இவ்வாறு தீக்குளிக்க முயற்சி செய்வது சட்டப்படி தவறு. எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ, போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள், என்று எச்சரித்தார்.

இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த எல்லத்துரை (38), அவருடைய மனைவி புவனேஷ்வரி ஆகியோர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் வீட்டுக்கு கடந்த 2009-ம் ஆண்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தோம். இணைப்பு வழங்கிய சில மாதத்திலேயே அதனை துண்டித்துவிட்டனர். பின்னர் பல முறை விண்ணப்பம் அளித்தும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இது குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story