50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

நெல்லை, 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தமிழகத்தில் வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 3½ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,931 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மொத்தம் 32 ஆயிரத்து 887 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், மாற்றுத்திறனாளிகள், 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிவடைந்த 2 மணி நேரத்துக்குள் ஓட்டுப்பதிவு எந்திரத்தை எடுத்துச்சென்று பணியாளர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டை பதிவு செய்ய வசதியாக தேர்தல் பயிற்சி வகுப்பின்போதே தபால் ஓட்டு சீட்டை வழங்க வேண்டும். மேலும் அவரவர் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே அந்த தபால் ஓட்டு சீட்டை பெற்று சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story