புயலின் போது வெளியே செல்ல வேண்டாம்: அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் வைத்திருங்கள் - அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்


புயலின் போது வெளியே செல்ல வேண்டாம்: அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் வைத்திருங்கள் - அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 8:50 PM GMT)

புயலின்போது வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம், அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

கஜா புயல் கடலூர் – பாம்பனுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி, புதுவை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா, உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயல் நாளை (புதன்கிழமை) அல்லது 15–ந்தேதி புதுச்சேரி அருகே கரையை கடக்கக்கூடும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழையை கருத்தில்கொண்டு கடந்த சில மாதங்களாக மீட்பு பணிகளுக்கான தயார் நிலை பற்றிய பல ஆய்வு கூட்டங்களும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகளும் வருவாய் மற்றும் பேரிடர் மையத்தால் நடத்தப்பட்டது.

அதன்விளைவாக புதுச்சேரி அரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அனைவரும் இந்த கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் வெளியூர் பயணிகள் புயல் காரணமாக தங்கள் ஊர்களுக்கு செல்ல இயலாமல் துன்பப்படுவோருக்கு உடனே உரிய உதவிகள் செய்திட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் வெளியூரில் இருந்து மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல இயலாமல் தவிப்போருக்கும் உணவு, உறவிடம் அளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காற்றின்போது பேனர்கள் சரிந்து விபத்து ஏற்படும் என்பதால், பேனர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் தாங்களாகவே நிவாரண முகாம்களுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களில் வசிப்பவர்களை கண்டறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும்.

புயல் வீசும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம். தேவையான பால், உணவு பொருட்கள், தண்ணீர் போன்ற அத்தியவசிய பொருட்களை வீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு உணவு தேவைப்பட்டால் மைய சமையல் கூடம் மூலம் சமைத்து வழங்கப்படும். அவசர கால எண்களில் வரும் புகார்களை அதிகாரிகள் பெறாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.


Next Story