சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் கே.பி.முனுசாமி பேட்டி


சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 9:01 PM GMT)

சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டங்களும் அனைத்து குடும்பங்களுக்கும் சென்றடைவதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்திலும், தங்கும் விடுதிகளிலும் பொழுதை கழித்து விட்டு தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் உண்ணாவிரத போராட்டம் என்ற நாடகத்தை நடத்துகின்றனர். அ.ம.மு.க. என்பது கட்சியே கிடையாது. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவருக்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்தபிறகு கட்சி தேர்தலை தலைமைக்கழகம் அறிவிக்கும்.

இலவச திட்டங்கள் மூலம் ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியார், அண்ணா ஆகியோரின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம், ஜெயலலிதாவின் விலையில்லா சைக்கிள், சீருடை, மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இவ்வளவு பெரிய வளர்ச்சியை, சர்கார் படத்தில் விளையாட்டுத்தனமாக விமர்சித்துள்ளனர். அந்த படம் ஸ்டாலினை திருப்திபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம். இதில் இயக்குனர் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story