ராமநத்தம் அருகே: வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ராமநத்தம் அருகே: வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 9:34 PM GMT)

ராமநத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநத்தம், 


ராமநத்தம் அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவரது மகன்கள் வெங்கடேசன் (40), முருகேசன் (36), அழகேசன் (34). இவர்களுக்கு திருமணமாகி டி.ஏந்தலில் அடுத்தடுத்த 3 வீடுகளில் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெங்டேசன், முருகேசன், அழகேசன் ஆகிய 3 பேரும் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றனர். இதன்காரணமாக அழகேசன் மனைவி வித்யா தனது தாய் வீடான பெரம்பலூர் மாவட்டம் ஒகளூரில் வசித்து வருகிறார். இதே போல் முருகேசன் மனைவி கோமதி தனது குழந்தையின் படிப்புக்காக பெரம்பலூரிலும், வெங்கடேசன் மனைவி வினோதா தனது குழந்தையின் படிப்பாக திருச்சியிலும் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.

இதனால் கந்தசாமி தினமும் இவர்களது வீட்டிற்கு பகல் நேரத்தில் வந்துவிட்டு, இரவு அதே பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அழகேசனின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அழகேசனின் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடினர்.

மேலும், அடுத்தடுத்துள்ள வெங்கடேசன், முருகேசன் ஆகியோரது வீடுகளுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். ஆனால் அதில் பணம், நகை எதுவும் இல்லை.

இதற்கிடையே அழகேசன் வீட்டின் வராண்டாவில் கந்தசாமிக்கு சொந்தமான ஒரு பீரோ இருந்தது. அதையும் மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்றனர். ஆனால் அந்த பீரோவில் நகை-பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவில்லை.

இந்த சம்பவம் பற்றி ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வீகின்றனர்.

Next Story