பா.ஜனதாவை சிவசேனா ரகசியமாக நேசிக்கிறது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்


பா.ஜனதாவை சிவசேனா ரகசியமாக நேசிக்கிறது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
x
தினத்தந்தி 13 Nov 2018 5:21 AM IST (Updated: 13 Nov 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவை சிவசேனா ரகசியமாக நேசிப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

நாக்பூர்,

மத்திய, மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சி சிவசேனா. இருப்பினும் பா.ஜனதா அரசின் முடிவுகளையும், அதன் தலைமையையும் சிவசேனா தொடர்ந்து வசைபாடி வருகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இனி வரும் அனைத்து தேர்தல்களையும் தனித்து சந்திக்கப்போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கேள்விக்குறி ஆகியுள்ளது. இதன் காரணமாக ஓட்டுகள் பிரித்து எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்பதால் பா.ஜனதா, சிவசேனா தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சிவசேனா அதற்கு இணக்குவது போல தெரியவில்லை.

இந்த பிரச்சினை குறித்து நாக்பூரில் சுற்றுப்பயணம் செய்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “பா.ஜனதா, சிவசேனாவுடனான தனது அன்பை நேரடியாக வெளிப்படுத்துகிறது. ஆனால் சிவசேனா ரகசியமாக பா.ஜனதாவை நேசித்து வருகிறது” என்று கூறினார்.

மேலும் அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயரை முறையே சாம்பாஜி நகர் மற்றும் தாராசிவ் என மாற்றும் சிவசேனா கோரிக்கை குறித்து பதில் அளித்த அவர், “இதற்கான வரைவு அறிக்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆயினும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன” என கூறினார்.

Next Story