பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் 490 பேர் கைது


பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்  490 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:00 PM GMT (Updated: 13 Nov 2018 10:51 AM GMT)

பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 490 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 490 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள் சாலை மறியல் 

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நெல்லை திட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டை மகராஜநகர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. கிளை தலைவர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார்.

தொழிற்சங்க நிர்வாகிகள் நாகையன், சுப்பிரமணியன், பிரம்ம நாகலிங்கம், இசக்கிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பணி நிரந்தரம்... 


ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கருணை தொகை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கொடுக்க வேண்டும். 11 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டை உறுதி செய்ய வேண்டும். பணியின் போது மரணம் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். பணியின் போது மின்விபத்து ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் நெற்றியில் நாமமும், கையில் தட்டுகளை வைத்தும் இருந்தனர்.

490 பேர் கைது 

பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 490 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தியாகராஜ நகர் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஒப்பந்த தொழிலாளர்களின்போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story