உத்திரமேரூர் அருகே முருகன், நந்தி சிலைகள் கண்டெடுப்பு


உத்திரமேரூர் அருகே முருகன், நந்தி சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 4:45 AM IST (Updated: 14 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே முருகன், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வயல் வெளியில் சிவலிங்கம், நந்தி சிலை மற்றும் மற்றொரு சிலை இருப்பதாக உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பிரம்மசாஸ்தா எனும் முருகன் சிலை, சிவலிங்கம், நந்தி சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிலை குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி கூறியதாவது:-

இந்த சிலையை ஆய்வு செய்தபோது 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரம்மசாஸ்தா என்னும் முருகன் சிலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட இந்த முருகன் சிலை ½ அடி புதைந்து காணப்பட்டது. தலையில் மகுடத்துடன், காதுகளில் பத்ர குண்டலமெனும் பனையோலையிலான காதணியும், காணப்பட்டது. 4 கைகளை கொண்ட இந்த சிலையில் வலது பக்க ஒரு கையில் அக்க மாலையும், 2-வது கை அருள் பாலித்தபடியும், இடப்பக்கம் ஒரு கையில் கமண்டலமும், மற்றொரு கை மடித்து தொடையின்மீது வைத்த நிலையிலும் உள்ளது. மார்பிலும், இடையிலும் ஆபரணங்களுடன் நின்ற நிலையில் காணப்படுகிறது. முருகபெருமான் அக்கமாலை, கமண்டலத்துடன் காட்சியளிப்பதை பிரம்மசாஸ்தா என்று அழைப்பர்.

படைப்பு கடவுளான பிரம்மனிடம் முருகன் பிரணவத்தின் பொருள் கேட்க, அதை அறியாத பிரம்மனை சிறையிலடைத்து அவரது படைப்பு தொழிலை முருகன் மேற்கொண்ட போது பிரம்மனுக்குரிய அக்கமாலை, கமண்டலம் தாங்கி ஞான குருவாய் நின்ற தோற்றமே பிரம்மசாஸ்தா என்று புராணங்கள் கூறுகிறது. இந்த வகை முருகன் பல்லவர் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் வழிபாட்டில் இருந்துள்ளது. குறிப்பாக தொண்டைமண்டலம் எனும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது.

இந்த முருகன் சிலை அருகில் சிவலிங்கம், நந்தி சிலை உள்ளதால் இங்கு சிவன் கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story