பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் 70 பேர் கைது


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் 70 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் சி.ஐ.டி.யூ. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் மறியல் போராட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ், செயலாளர் காணிக்கைராஜ், பொருளாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் அடையாளம் கண்டு ஒப்பந்தப்படி ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர் பிரபு, மாவட்ட தலைவர் மணிமாறன், சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டத்தையொட்டி தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story