திருமுல்லைவாயல் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி


திருமுல்லைவாயல் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Nov 2018 11:45 PM GMT (Updated: 13 Nov 2018 9:01 PM GMT)

திருமுல்லைவாயல் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் ஆபாசமாக திட்டியதால் தன் மகள் இந்த முடிவை எடுத்ததாக அவருடைய தந்தை குற்றம்சாட்டினார்.

ஆவடி,

திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மனைவி மகராசி. இவர்களின் மகள் ஹேமமாலினி (வயது 16). அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்களுக்கு மற்றொரு மகளும் உள்ளார்.

சுடலைமணிக்கும், பக்கத்து வீட்டாருக்கும் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பக்கத்து வீட்டார் புகார் அளித்தனர். இதனால் அங்கு திருமுல்லைவாயல் போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது சுடலைமணி வெளியே சென்று இருந்தார். மகராசி மற்றும் இரு மகள்களிடம் போலீசார் விசாரித்தனர். திடீரென ஹேமமாலினி 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஹேமமாலினி அனுப்பி வைக்கப்பட்டார். இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ஹேமமாலினி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுடலைமணி கூறுகையில், ‘பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தபோது போலீசார் அதை ஏற்கவில்லை. ஆன்-லைனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ரோந்து போலீசார் 2 முறை என் வீட்டுக்கு வந்து எதற்காக பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சினை செய்கிறாய் என என்னிடம் கேட்டனர். 12-ந் தேதி மாலை நான் வீட்டில் இல்லாத போது என் மனைவி, மகள்களை போலீசார் ஆபாசமான வார்த்தையால் திட்டினர். விபசார வழக்கு போடுவோம் எனவும் மிரட்டினர். இதனால் மனமுடைந்த எனது மகள் மாடியில் இருந்து குதித்து விட்டார்’ என்றார்.

திருமுல்லைவாயல் போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இருவீட்டார் பிரச்சினையில் மாணவி தற்கொலைக்கு முயன்றார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Next Story