திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Nov 2018 11:15 PM GMT (Updated: 13 Nov 2018 9:02 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபமும், மகா தீபமும் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள அன்னதானக் கூடம், பிரசாதம் தயாரிக்கும் இடம், பிரசாதம் விற்பனை செய்யும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார், சுப்பிரமணியன், சந்திரசேகர், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் கோவிலில் உள்ள பிரசாதம் தயாரிக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு முறுக்கு, தட்டை, லட்டு போன்ற பிரசாத பொருட்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் குறித்தும், அவற்றின் காலாவதி தேதியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பிரசாதம் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று பிரசாதங்கள் அடைக்கப்பட்டு உள்ள பாக்கெட்டுகளில் தயாரிப்பு இடம், காலாவதி தேதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய அவற்றின் மாதிரிகளை சேலத்தில் உள்ள உணவு தரம் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கோவிலில் ராஜகோபுரத்தின் அருகில் அன்னதான கூடத்திற்கு சென்று சுத்தமாக உள்ளதாக என்றும், தரமான பொருட்கள் கொண்டு அன்னதானம் நடைபெறுகிறதா, சமையல் செய்பவர்களும், உணவு பரிமாறுபவர்களும் சுத்தமாக உள்ளனரா, சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story