அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி.– யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
உள்ளாட்சி துறை அமைப்பின் கீழ் இயங்கி வரும் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வெள்ளையடித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் இணைந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை கண்டறிய ‘பயோ மெட்ரிக் முறை’ அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த ‘பயோ மெட்ரிக் முறை’ தற்போது 50 பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதத்துக்குள் (டிசம்பர்) 1000–ம் பள்ளிகளில் ‘பயோ மெட்ரிக் முறை’ தொடங்கப்படும். இது தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் 1½ லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் கேபிள் மூலம் சென்னை, காஞ்சீபுரம், கோவையில் உள்ள 300 பள்ளிகளில் இலவசமாக இணையதள வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.