பல்லடம் அருகே மொபட் மீது லாரி மோதி தாத்தாவின் கண் முன்பே மாணவி பலி
பல்லடம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தாவின் கண் முன்பே மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி கிருஷ்ணாநகர் சோழாகார்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி சாரதாமணி. இவர்களுடைய மகள்கள் நளினி (வயது 13), தாமிரபரணி (9), கீதாஞ்சலி (7). இதில் நளினி அங்குள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக கரைப்புதூரில் உள்ள மாமனார் ராமசாமி வீட்டிற்கு சரவணக்குமார் தனது குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் சரவணக்குமார் அவருடைய மனைவி சாராதாமணி மற்றும் மகள் தாமிரபரணி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கரடிவாவி சென்று விட்டனர்.
இந்த நிலையில் மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நேற்று காலையில் பேத்திகள் நளினி, கீதாஞ்சலி ஆகியோரை ஒரு மொபட்டில் ஏற்றிக்கொண்டு ராமசாமி கரடிவாவி நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் நளினி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே நளினி பலியானார். ராமசாமியும், கீதாஞ்சலியும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து சென்று நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாத்தாவின் கண் முன்பே லாரி மோதி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.