சாக்கடை கால்வாயை முறையாக கட்டக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்


சாக்கடை கால்வாயை முறையாக கட்டக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சாக்கடை கால்வாயை முறையாக கட்டக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 7–வது வார்டு அவினாசிகவுண்டம்பாளையத்தை அடுத்த பாலு இன்னோவேசன் குடியிருப்பு பகுதியில் 70–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கழிவுநீர் வெளியேறும் வகையில் மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. அந்த கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் குப்பைகள் கொட்டப்பட்டு, கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் கொசு உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காந்திநகர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை ஏற்கனவே பாலு இன்னோவேசன் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயுடன் இணைத்து நல்லாற்றுப்பாளையம் ஓடையில் சென்று கலக்கும் வகையில் புதிய கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் ஆழம் குறைவாக இருப்பதுடன் முறையாக கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக பாலு இன்னோவேசன் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல்2 அடி ஆழத்திற்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாலு இன்னோவேசன் வீட்டு உரிமையாளர் நலசங்கம் சார்பில் தலைவர் ராமசாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக உதவி கமி‌ஷனர் வாசுக்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அப்போது சாக்கடை கால்வாயை முறையாக கட்டுமாறு மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மனுவை பெற்று கொண்ட வாசுக்குமார் அந்த பகுதியில் தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாக்கடை கால்வாய் பிரச்சினையை நேரில் சென்று பார்த்த பிறகு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதன் பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதே பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அவினாசிகவுண்டம்பாளையம் கிளை சார்பிலும் உதவி கமி‌ஷனர் வாசுக்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டது.


Next Story