கந்தசஷ்டி விழாவையொட்டி மாவட்டத்தில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் தரிசனம்


கந்தசஷ்டி விழாவையொட்டி மாவட்டத்தில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்,

பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும் மகா தீபாராதனையும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இதேபோல கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. பொத்தனூர் பச்சைமலை முருகன், பஜனைமடத்திலுள்ள முருகபெருமான், பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் மற்றும் பாலப்பட்டியில் உள்ள கதிர்காமத்து கதிர்மலை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம்

ராசிபுரம் நகரம், சாமி சிவானந்தா சாலையில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பால முருகன் சாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி கங்கணம் கட்டுதல், சிறப்பு பூஜை, சாமி வலம் வருதல் நடந்தது. நேற்று காலையில் பாலமுருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு பாலமுருக கடவுளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாலமுருகன் சாமி சந்தனம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் இன்று பகல் 1.45 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அப்போது மாப்பிள்ளை அழைப்பு, பாத பூஜை, நலுங்கு வைத்தல், மாலை மாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல், திருக்கல்யாணம் திருமண விருந்து ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் திருவீதி உலா நடக்கிறது.

மாவட்டம் முழுவதும்

வெண்ணந்தூரில் முத்துக் குமாரசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சாமிக்கு தேவசேனாதிபதி பட்டமும், கங்கணமும் கட்டி, சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சுப்பிரமணி சாமி சூரனை வதம் செய்தார்.

இதேபோல கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசாமி கோவில்

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் எழுந்தருளி வாண வேடிக்கைகள் முழங்க சூரனை வதம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விவசாய விளை பொருட்களை சாமி மீது வீசி வழிபட்டனர். மூலவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.

விழாவில் இன்று (புதன்கிழமை) சாமி திருவீதி உலா, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான அம்பிகாதேவி, செயல் அலுவலர் சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story