பேரூர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டை அடித்து கொன்றது; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


பேரூர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டை அடித்து கொன்றது; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2018 3:28 AM IST (Updated: 14 Nov 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டை அடித்து கொன்றது. இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரூர்,

மதுக்கரை வனச்சரகம் மாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு தெற்கே உள்ள மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் காட்டுயானைகள், சிறுத்தைப்புலி, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது காட்டுயானைகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் அங்குள்ள தோட்டம் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் குப்பனூரில் உள்ள சதாசிவம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 50) என்பவர் தன்னுடைய 30–க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு பட்டிக்கு அருகே காவல் இருந்துள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டுப்பட்டியைச் சுற்றி நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. மேலும் பட்டிக்குள் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டும், மோகன் திடுக்கிட்டு எழுந்து டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது பட்டிக்குள் சிறுத்தைப்புலி புகுந்து ஆட்டை அடித்து தின்று கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதி நோக்கி ஓடியது.

இதில் ஒரு ஆடு உயிரிழந்தது. மேலும் 3 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் குப்பனூர் கிராம மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கிருந்தோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். சிறுத்தைப்புலி நடமாட்டமுள்ள குப்பனூர் தோட்டப்பகுதியில் நேற்று கூண்டை வைத்தனர்.

இதுகுறித்து தோட்ட உரிமையாளர் சதாசிவம் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டமில்லை. தற்போது மீண்டும் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியை நோக்கி சிறுத்தைப்புலி நடமாட்டம் தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி தோட்ட விவசாயிகளும் கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தாலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றார்.


Next Story