குண்டும், குழியுமான மவுண்ட்பிளசன்ட் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


குண்டும், குழியுமான மவுண்ட்பிளசன்ட் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2018 10:11 PM GMT (Updated: 13 Nov 2018 10:11 PM GMT)

குண்டும், குழியுமாக கிடக்கும் மவுண்ட்பிளசன்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த சில மாதங்களாக தீவிரமாக பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. கூடலூரில் இருந்து கோழிக்கோடு மற்றும் ஊட்டி செல்லும் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறி விட்டது.

கூடலூர் நகராட்சி 5–ம் வார்டில் ராஜகோபாலபுரம், கோத்தர்வயல், மவுண்ட்பிளசன்ட் உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், வீடுகள் உள்ளன. இந்த நிலையில் ராஜகோபாலபுரத்தில் இருந்து மவுண்ட்பிளசன்ட் செல்லும் சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து கிடந்தது.

இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 2014–ம் ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாணவ– மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதேபோல் அவசர காலங்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவது இல்லை. மேலும் வாகனங்களையும் பழுதடைந்த இந்த சாலையில் ஓட்டுவதற்கு டிரைவர்கள் முன்வருவது இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story