புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகளை கலெக்டர் ஆய்வு


புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 4:20 AM IST (Updated: 14 Nov 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

புலியடித்தம்பம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தண்ணீர் தேக்கி வைத்து உள்ள பாத்திரங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டதுடன் சுத்தமில்லாத தண்ணீர் பாத்திரங்களை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள நபர்களிடம் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார்.

மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:–

 ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்தால்தான் சுற்றுப்புறச் சுழல் தூய்மையாக இருக்கும். அதன்மூலம் நோய்கள் பரவாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் தங்களது கடமையாக எண்ணி வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்பாடற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை உருவாக்கும் லார்வா புழுக்கள் எளிதாக உருவாகின்றன. அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வழிவகை செய்கின்றது. அது 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று நோய்களை பரப்பும் சக்தி கொண்டதாகும். அதிலும் பகல் நேரத்தில்தான் ஏடிஸ் என்ற கொசு அதிக அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.

தினமும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவிட வேண்டும். இதன்மூலம் கைகளில் கிருமிகள் தொற்றுவதை எளிதாக தடுத்திடலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வீடுகளில் கொசு புழு உற்பத்தியுடன் தண்ணீர் தேக்கி வைத்துள்ள 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வருங்காலங்களில் தவறுகள் செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கூடுதல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவன், சந்திரா, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story