ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை; கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கை தீவிரம்


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை; கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 14 Nov 2018 5:00 AM IST (Updated: 14 Nov 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வந்துள்ளனர்.

ராமநாதபுரம்,

வங்க கடலில் உருவாகிய கஜா புயல் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அதில் ஒரு குழுவினர் ராமநாதபுரம் வந்து கலெக்டர் வீரராகவராவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். மீட்பு பணி தொடர்பாக அவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மீட்பு பணிக்கு தேவையான மிதவை படகு, மரம் அறுக்கும் எந்திரம், மருத்துவ உபரகணங்கள், கவச உடை, விளக்குகள், ஒளிரும் கருவிகள், கயிறுகள் என அனைத்துவித மீட்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

புயலினால் தகவல் தொடர்பில் தடை ஏற்படும் பட்சத்தில் மாற்று ஏற்படாக தகவல்தொடர்பை நேரடியாக மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவிடம் பயிற்சி பெற்ற தலா ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களையும் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி. காமினி ஆகியோர் சந்தித்து அறிவுரை வழங்கினர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை சூப்பிரண்டுகள் நடராஜன், ரவீந்திர பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் வீரராகவராவ், பாம்பன் பகுதியில் செய்யப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாம்பன் பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள அனைத்து படகுகளையும் தெற்கு பகுதிக்கு கொண்டு வருவது சம்பந்தமாகவும், படகுகளின் பாதுகாப்பு குறித்தும் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள் ராயப்பன், அலெக்ஸ், அருள் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் 232 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடலோர பகுதிகளில் 180 கிராமங்கள் உள்ளன. அனைத்து மீனவ கிராமங்களிலும் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எந்த படகுகளும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரக்கோணத்தில் இருந்து 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ராமநாதபுரத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் மண்டபத்தில் 40 பேர் முகாமிட்டுள்ளனர். மீதமுள்ள 40 பேர் கொண்ட நடமாடும் குழுவினர் ஆவர். அவர்கள் ராமேசுவரம் முதல் திருவாடானை வரையிலான பகுதிகளை கண்காணிப்பார்கள். இதுதவிர அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

தனுஷ்கோடியில் உள்ள மீனவர்கள் புதுரோடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள். மாவட்டம் முழுவதும் 142 பொக்லைன் மற்றும் தேவையான கிரேன் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மீனவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள 1,250 விசைப்படகுகள் உள்பட அனைத்து படகுகளும் கடலுக்கு செல்ல அனுமதிக்க கிடையாது. அனைத்து புயல் காப்பகங்களும் தயார் நிலையில் உள்ளன. 39 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மீன்துறை உதவி இயக்குனர் காத்தவராயன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story