மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்கு பால் தாக்கரே பெயர் : சிவசேனா கோரிக்கை


மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்கு பால் தாக்கரே பெயர் : சிவசேனா கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2018 4:49 AM IST (Updated: 14 Nov 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்கு பால் தாக்கரேயின் பெயரை சூட்ட வேண்டும் என்று சிவசேனா திடீர் கோரிக்கை வைத்துள்ளது.

மும்பை,

மும்பை- நாக்பூர் இடையே சம்ருதி விரைவு சாலையை அமைப்பது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டமாகும். ரூ. 46 ஆயிரம் கோடி செலவில் 701 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இந்த சாலை அமைகிறது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், பொதுப்பணித்துறை மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புனே- மும்பை இடையே விரைவு சாலை அமைப்பது பால் தாக்கரேவின் கனவு திட்டமாக இருந்தது. அவரது ஆசை 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்தபோது முழுமை பெற்றது. இதற்கான பெருமை பால்தாக்கரேவுக்கு வழங்கப்படவேண்டும்.

அவரது தொலைநோக்கு பார்வைக்கு மதிப்பளிக்கும் வகையில், மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்கு பால்தாக்கரேவின் பெயரை சூட்டவேண்டும் என்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மும்பை- நாக்பூர் விரைவு சாலைக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “ விரைவு சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகள் எங்கள் கட்சியினரை அணுகி பிரச்சினையை கூறலாம்” என தெரிவித்து இருந்தார். மேலும் விவசாயிகளை விலை கொடுத்து பெறப்படும் வளர்ச்சி தேவையில்லை என தெரிவித்தார்.

தற்போது அவரது கட்சியினர் விரைவு சாலைக்கு பால் தாக்கரேவின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story