போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நூலகம்
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர் குறைதீர்க்கும் பிரிவு அலுவலகத்தில் நிறைய இட வசதி இருந்தது. இதனையடுத்து காலியாக இருக்கும் இடத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் வங்கிப்பணிகள் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் சாதாரண புத்தகங்கள் கொண்ட நூலகம் அப்போதைய மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மண்டல அலுவலகத்துக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ–மாணவிகள் இந்த நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீட் மற்றும் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களும் இங்கு உள்ளன. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நூலகம் திறந்திருக்கும். தற்போது, இந்த நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் டி.அருண்பிரசாத் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சி பூங்காவில் உட்கார்ந்து போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவ–மாணவிகள் பாஸ்போர்ட் அலுவலக நூலகத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். போட்டித்தேர்வு மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படின், அவற்றையும் நூலகத்துக்கு வாங்கி கொடுப்பதற்கு தயாராக உள்ளோம்.
மதுரை மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டித்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுகளில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன, தொடர்ச்சியாக எது மாதிரியான கேள்விகள் திரும்ப, திரும்ப கேட்கப்படுகின்றன ஆகியன குறித்து அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.