மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை: புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு


மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை: புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 12:06 AM GMT (Updated: 14 Nov 2018 12:06 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மரக்காணம்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில், அரசு சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பெரிய முதலியார் சாவடியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்துக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா?, மின்சார வசதிக்காக ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் புயல் காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தேவையான மரம் வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதா என்றும் அங்குள்ள அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து கலெக்டரும் அதிகாரிகளும் புறப்பட்டு சின்ன முதலியார்சாவடியில் உள்ள மீனவ குப்பத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது புயல் கரையை கடந்து, அபாயம் நீங்கும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது மீனவர்கள் தங்கள் மீனவ குப்பத்தின் குடியிருப்பு பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் எனவே கடல் அரிப்பை தடுக்க அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்தனர். அதுகுறித்து பதில் அளித்த கலெக்டர் மீனவர்களின் அந்த கோரிக்கை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு கடலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருப்பதை கலெக்டர் பார்த்தார். உடனே அவர்களை அழைத்து பேசிய கலெக்டர், ‘‘தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் சாதாரண நாட்களிலேயே திடீர், திடீரென ராட்சத அலைகள் எழுந்து கடலில் குளிப்பவர்களை கடலுக்குள் இழுத்து சென்றுவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தற்போது கடலில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதால் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது என்றும் எனவே கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக குளிக்கும்படியும் அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் மரக்காணம் அருகே உள்ள அழகன்குப்பம், செட்டிநகர் மீனவர் பகுதி மற்றும் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து செட்டிநகர் மீனவர் பகுதியில் முகாமிட்டு இருக்கும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரையும் சந்தித்தார். அப்போது மீட்பு பணிக்காக அவர்கள் வைத்திருந்த பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு அவர்களுக்கு மீட்பு பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது;–

விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் ‘கஜா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு 5 மீனவர் பகுதிக்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போல் பேரிடர் மீட்பு குழுவினருடன் அனைத்து கிராமங்களிலும் அப்பகுதியில் உள்ள 20 சிறப்பு பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் புயல் மற்றும் மழையால் பாதிப்புகள் உண்டானால் அதிகாரிகள் வருவதற்குள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இது போல் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்பவர்களை மீட்க பைபர் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்களும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்க இப்போதே அனைத்து கிராமங்களிலும் உள்ள குடி நீர் தொட்டிகளில் குடி நீர் நிரப்பப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் பொது மக்களை மட்டும் அல்ல கால் நடைகளையும் பத்திரமாக பாதுகாக்க அதற்கும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயல், கன மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இயற்கை பேரிடரால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் பொது மக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 1077, வாட்ஸ்அப் எண் 8778582464, தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story