ஒகேனக்கல்லில் அருவிக்கு செல்லும் சாலையில் கம்பி தடுப்புகளை அகற்ற கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஒகேனக்கல்லில் அருவிக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறுகடைகள், ஓட்டல்கள் தங்கு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் உணவருந்தும் கூடம், மீன்மார்க்கெட் ஆகியவையும் செயல்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் 70 கடைகள் கட்டி மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அருவிக்கு செல்லும் சாலையில் குறுகலான இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் அருவிக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கடைகள், ஓட்டல்களுக்கு தேவையான சரக்குகளை வாகனங்களில் எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்கள், வசித்து வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை கூட அந்தசாலைப்பகுதியில் பயன்படுத்த முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மிகவும் குறுகலான இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர்.