கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு, எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவு விரைவில் மின்உற்பத்தி தொடங்க வாய்ப்பு


கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு, எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவு விரைவில் மின்உற்பத்தி தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 9:30 PM GMT (Updated: 14 Nov 2018 2:44 PM GMT)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் முடிவடைந்தது.

வள்ளியூர், 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் முடிவடைந்தது. இதனால் அந்த அணுஉலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அணுஉலையாக இந்த அணுமின் நிலையம் திகழ்கிறது. முதல் அணுஉலை கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்உற்பத்தியை தொடங்கியது. 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் உற்பத்தி இலக்கை அடைந்தது.

பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி முதல் அணுஉலையில் வணிக ரீதியிலான மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிடைத்த மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.

பராமரிப்பு பணி 

முதல் அணுஉலையின் மூலம் 20 ஆயிரத்து 156 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அணு உலையில் வருடாந்திர பாரமரிப்பு பணிக்காகவும், எரிந்த எரிபொருட்களை அகற்றிவிட்டு புதிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்புவதற்காகவும் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந்தேதி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் 65 நாட்களுக்குள் முடிவடைந்து மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி முதல் அணுஉலையில் உள்ள முக்கியமான பகுதிகள், டர்பன் ஜெனரேட்டர்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாமல் முதல் அணுஉலையில் மீண்டும் உற்பத்தி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

விரைவில் மின்உற்பத்தி... 

இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று முதல் அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விரைவில் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்போது 2–வது அணு உலையின் மூலம் 750 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story