வீரகேரளம்புதூர் தாலுகாவில் நடந்த மனுநீதி முகாமில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்
வீரகேரளம்புதூர் தாலுகாவில் நடந்த மனுநீதிநாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
வீரகேரளம்புதூர் தாலுகாவில் நடந்த மனுநீதிநாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
மனுநீதி நாள் முகாம்
வீரகேரளம்புதூர் தாலுகா பாலபத்திரராமபுரம் மற்றும் மருக்காலங்குளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 110 மனுக்கள் பெறப்பட்டு 31 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 பயனாளிகளுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை பெறுவற்கான உத்தரவையும், ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகையாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும், 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக தலா ரூ.8 ஆயிரத்திற்கான காசோலையையும், இயற்கை மரண உதவித்தொகையாக 7 பயனாளிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 500–க்கான காசோலையையும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய வீரிய காய்கறி நாற்றுகளையும், ஒருவருக்கு வீட்டுத்தோட்ட காய்கறி விதைகளையும், 6 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளையும் கலெக்டர் ஷில்பா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–
நடவடிக்கை
கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. குழந்தை பிறப்பு முதல் அனைத்து நிலைகளிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மக்களுக்கு எளிமையாக கிடைத்திட தற்போது இ–சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. சிறப்பான கல்வியால் தான் அடுத்த தலைமுறையினரை திறமைசாலிகளாக வளர்க்க முடியும். எனவே உங்களது குழந்தைகளை அவசியம் படிக்க வைக்க வேண்டும். அரசு அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொசு ஒழிப்பு பணி
தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை நாள்தோறும் அதிகாலை முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், தென்காசி உதவி கலெக்டர் சவுந்திரராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா, வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story