வாரத்தில் ஒரு நாளாவது தலைவர்களின் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு அறிவுரை


வாரத்தில் ஒரு நாளாவது தலைவர்களின் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு அறிவுரை
x
தினத்தந்தி 15 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 9:30 PM IST)
t-max-icont-min-icon

வாரத்தில் ஒரு நாளாவது தலைவர்களின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

ராசிபுரம், 

ராசிபுரம் அருகே புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடந்த வினா-விடை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை தாங்கினார். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 3 குழுக்களை சேர்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

பள்ளியில் உள்ள முக்கிய தலைவர்களின் புத்தகங்களை மாணவர்கள் திறந்து பார்க்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது தலைவர்கள் குறித்த புத்தகங்களின் சுருக்கத்தையாவது மாணவர்கள் படிக்கவேண்டும். அதை தனது சகமாணவர்களுக்கு கூறவேண்டும்.

இதை கவனிக்க வேண்டியது ஆசிரியர்களின் பணி. ஆசிரியர்கள் சொல்வதைவிட நண்பர்கள் சொல்லும்போது சிறு விஷயம் கூட எளிதில் மனதில் பதியும்.

பெண் அடிமைத்தனம் மற்றும் சாதி ஒழிப்பிற்காக ஈரோட்டில் இருந்து புறப்பட்டவர் தந்தை பெரியார். அவர் 20 ஆயிரம் கூட்டங்களுக்கு மேல் பங்கேற்று இருப்பார். அவருக்காக அதை அவர் செய்யவில்லை. பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செயல்பட்டார்.

முயற்சி செய்தால் கடவுள் அருள் இல்லை என்றாலும் வெற்றி பெற முடியும் என திருவள்ளுவர் கூறி உள்ளார். எனவே உழைத்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் பெயர் உங்கள் பள்ளியில் சொல்லப்பட வேண்டும் என்றால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார்.

அதற்கு சரியாக பதில் அளித்த 5 மாணவர்களுக்கு புத்தகங்களை அவர் பரிசளித்தார். பின்னர் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளியில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Next Story