சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு எடப்பாடி அருகே சொந்த ஊரில் உடல் அடக்கம்


சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு எடப்பாடி அருகே சொந்த ஊரில் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 4:45 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் எடப்பாடி அருகே சொந்த ஊரில் நேற்று நடைபெற்றது.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள நியூமேடு மத்திய ரிசர்வ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், தீனதயாளன் (23), நவீன்குமார் (18) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தீஷ்கார் மாநிலத்தில் விஜய்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பணியில் கணேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துபோனார்.

இதைத்தொடர்ந்து அங்கு அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆவடி மத்திய ரிசர்வ் படை வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த மணியக்காரன் பாளையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

நேற்று அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படை துணை சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையில் மலர்வளையம் வைக்க வந்தனர். அப்போது கணேசனின் உறவினர்கள் மத்திய ரிசர்வ் படையினரை தடுத்து தங்களுக்கு எந்த தகவலும் சரிவர தரப்படவில்லை, உள்ளுர் போலீசாரும் தகவல் தரவில்லை, மேலும் 34 ஆண்டுகள் பணியில் இருந்து இறந்துள்ளார், அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும், அதுவரை மலர்வளையம் வைக்க கூடாது எனக்கூறி தடுத்தனர்.

இது குறித்து தகலல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர் அங்கு சென்று அவர்களிடம் இயற்கை மரணம் அடைந்தவருக்கு சட்டப்படி அரசு மரியாதை வழங்கப்பட மாட்டாது என எடுத்து கூறினர். இதில் கணேசனின் உறவினர்கள் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படை துணை சூப்பிரண்டு சதீஷ் குமார் தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story