அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குழந்தைகள் தின விழா
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப் பட்டது.
பெரம்பலூர்,
நவம்பர் 14-ந்தேதி ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (மேற்கு) தலைமை ஆசிரியை கீதா தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் அலங் கரிக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்திற்கு முன் மாணவ-மாணவிகள் இரு கரங்களை கூப்பி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, பாட்டு, நடன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோல் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) தலைமை ஆசிரியை திருமலை செல்வி தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஜவஹர்லால் நேரு போல வேடமிட்டு வந்த மாணவர் கையில் நேரு உருவப்படத்தினை வைத்திருந்தார். அப்போது சக மாணவ, மாணவிகள் குழந்தைகள் தின உறுதிமொழியை எடுத்து கொண்டு தங்களது கட்டை விரலை உயர்த்தி இலக்கினை அடைய பாடுபடுவோம் என்றனர். இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதே போல மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டது.
அரியலூர் தொழிற்பயிற்சி மையத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகமது யூனுஸ்கான் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வாணி மாணவ பருவத்தில் ஏற்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களுக்கு இந்த வயதில் ஏற்படும் பிரச்சினைகள் அதிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றி பேசினார். இதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி அலுவலர் தனபால் வரவேற்றார். முடிவில் பயிற்சியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story