சாலை விதிகள் குறித்த குறும்படங்களை வாகன ஓட்டிகளிடம் காண்பித்து விழிப்புணர்வு


சாலை விதிகள் குறித்த குறும்படங்களை வாகன ஓட்டிகளிடம் காண்பித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:30 PM GMT (Updated: 14 Nov 2018 5:52 PM GMT)

சாலை விதிகள் குறித்த குறும்படங்களை வாகன ஓட்டிகளிடம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர், 

திருவாரூர் மாவட்டம் புல்லவராயன்குடிக்காட்டை சேர்ந்தவர் நாவுக்கரசன் (வயது 53). இவர் திருச்சி மாநகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.

ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும், செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியும் வாகனங்களை ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனங்கள் இருவர் செல்வதற்கு மட்டுமே என்பதனை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரெங்கராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் ஆகியோரின் ஆலோசனையில் பேரில் விழிப்புணர்வு குறும்படங்களை விழுப்புரம் மாவட்டம் உயிர் என்கிற தன்னார்வ அமைப்பு மற்றும் பெரம்பலூர் நகரை சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து இயக்க முடிவு செய்தார்.

தற்போது அவர் எடுத்துள்ள முதல் குறும்படத்தில் மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்படுவதும், பின்னர் செல்லும் வழியில் 2 நண்பர்களை ஏற்றி கொண்டு செல்கிறார். பின்னர் சாலையில் சிக்னல் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வதை போலீசார் பிடித்து விடுவார் என்று நினைத்து கொண்டு அந்த மாணவர் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்குகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகின்றனர். இதில் அவர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுகின்றனர்.

இதனை கண்ட போக்குவரத்து போலீசார், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுடன் அந்த குறும்படம் சோகத்துடன் நிறைவு பெறுகிறது. சாலை விதிகளை மதித்தும், ஹெல்மெட் அணிந்தும் கொண்டும், 3 பேர் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதனை அந்த குறும்படம் வலியுறுத்துகிறது.


இதனை தற்போது இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் சமூக வலைத்தளங்களான முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப் ஆகியவற்றிலும் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வாகன சோதனையின் போது, வாகன ஓட்டிகளிடம் அந்த குறும்படத்தினை காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சில போலீசார் அபராதம் விதித்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்புவார்கள். அப்படி இல்லாமல் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் குறும்படத்தினை காண்பித்து வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சக போலீசாருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.

Next Story