கரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது
கரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 62). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை திடீரென திருட்டு போனதாக கரூர் டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
இதே போல், கரூர் புதுதெருவை சேர்ந்த பாலாஜி, தனது நகை கடையில் வைத்திருந்த 1¼ பவுன் திருட்டு போனதாகவும், கரூர் மனோகரா கார்னரில் நின்ற போது தனது பையில் வைத்திருந்த 3 பவுன் நகை திருட்டு போனதாக ஆண்டாங்கோவிலை சேர்ந்த லட்சுமிதேவியும் (47) அடுத்தடுத்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் வழக்குப்பதிவு செய்து, பொது இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரித்த போது, கரூரில் தொடர்ச்சியாக நகை திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ்பாபு (35) என்பதும், அவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வசித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கரூர் உள்பட பல இடங்களில் அவர் நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 8 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story