உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட அனுமதி இலவசம் காப்பாட்சியர் தகவல்


உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட அனுமதி இலவசம் காப்பாட்சியர் தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:45 AM IST (Updated: 15 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட அனுமதி இலவசம் என்று காப்பாட்சியர் தெரிவித்தார்.

பொறையாறு,

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் வரலாற்று புகழ்பெற்ற டேனிஷ்கோட்டை உள்ளது. தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்ட ரெகுநாதநாயக்க மன்னன் கி.பி.1620-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி டென்மார்க் நாட்டு மன்னர் 4-ம் கிறிஸ்டியனுக்கு தரங்கம்பாடியில் வணிக தலம் அமைக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து தரங்கம்பாடியில் டேனிஷ்கோட்டை கட்டப்பட்டது. டென்மார்க் மன்னரின் நிர்வாக அலுவலகமாகவும், போர் வீரர்கள் தங்கும் இடமாகவும் இருந்த டேனிஷ்கோட்டை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 1978-ம் ஆண்டு முதல் தற்போதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இந்த கோட்டை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் டேனிஷ்கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு டேனிஷ் கோட்டையை பார்வையிட வருகிற 19-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அனுமதி இலவசமாகும். அதன்படி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள். பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் டேனிஷ் கோட்டையின் மேல் தளத்தில் உள்ள அருங்காட்சியகம், கீழ் பகுதியில் உள்ள பூங்கா, போர் வீரர்கள் தங்கும் அறை, உணவு சேமிப்பு கிடங்கு, சமையல் அறை, குடிநீர் சேமிப்பு அறை, குதிரை லாயம், சிறைச்சாலை ஆகியவற்றை இலவசமாக கண்டு களிக்கலாம். இந்த தகவலை டேனிஷ் கோட்டையின் தொல்லியல் துறை காப்பாட்சியர் பாஸ்கர் தெரிவித்தார்.

Next Story