சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த முதியவர்; விடிய விடிய தவித்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த முதியவர்; விடிய விடிய தவித்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 15 Nov 2018 5:00 AM IST (Updated: 15 Nov 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்து விடிய விடிய தவித்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. தற்போது குழாய் பதிக்கப்பட்டு குழிகள் மூடும் பணி நடைபெறுகிறது.

சத்தியமங்கலம் பெரியகுளம் நாடார் காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 75) என்பவர் நேற்று முன்தினம் மதியம் அக்ரஹார வீதியில் உள்ள தபால் அலுவலகத்துக்கு முதியோர் உதவித்தொகை பெறச்சென்றார். பின்னர் அவர் அந்தப்பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு, மீண்டும் அன்று இரவு 10 மணி அளவில் அக்ரஹார வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கிருஷ்ணசாமி அந்தப்பகுதியில் தோண்டப்பட்டு உள்ள சுமார் 23 அடி ஆழ பாதாள சாக்கடை குழிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். குழிக்குள் விழுந்ததில் சின்னசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பி உள்ளார். ஆனால் அவரின் சத்தம் வெளியே கேட்கவில்லை. இதனால் அவர் விடிய– விடிய குழிக்குள் இருந்து பரிதவித்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி வழியாக சென்ற ஒருவர் குழிக்குள் முதியவர் மயங்கி கிடந்ததை கண்டார். இதைத்தொடர்ந்து அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதியவரை மீட்க முயன்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழிக்குள் தவறி விழுந்த முதியவரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணசாமியை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சத்தியமங்கலம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த 1½ ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது குறிப்பிட்ட இடங்களில் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் அக்ரஹார வீதியில் பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் குழிக்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது.

எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story