முழு கணினி மயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசின் நிதிநிலை விபரத்தினை உடனுக்குடன் அறிய முடியும் - முதன்மை செயலாளர் தகவல்


முழு கணினி மயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசின் நிதிநிலை விபரத்தினை உடனுக்குடன் அறிய முடியும் - முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:15 AM IST (Updated: 15 Nov 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முழு கணினி மயமாக்கல் திட்டத்தின் மூலம் நிதிநிலை விபரத்தினை உடனுக்குடன் அறிய முடியும் என்று முதன்மை செயலளளர் தென்காசி ஜவகர் தெரிவித்து உள்ளார்.

கோவை,

தமிழக அரசின் கருவூலத்துறையில் முழு கணினி மயமாக்கல் நடவடிக்கையின் ஒருபகுதியான ஓருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு முதன்மை செயலாளரும், கருவூலகத்துறையின் ஆணையாளருமான தென்காசி ஜவகர் தலைமை தாங்கி பேசியதாவது:–

நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை அதாவது முழு கணினி மயமாக்கல் நடைமுறை படுத்தப்பட உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 29 ஆயிரம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மேலும் இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிதிநிலை விபரம் உடனுக்குடன் தெரிய வருவதுடன், நிகழ்நேர வரவினை அறிந்து கொள்ள முடியும். மேலும் தேவையற்ற காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது.

இதன் மூலம் பணிப்பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கபூர்வப் பணிகளில் ஈடுபடமுடியும். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் கால விரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும்.

பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப் பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதினால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கருவூலத்துறையின் கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் செல்வசேகர், வேளாண்மை பல்கலைகழக நிதிக்காப்பாளர் சசிக்கலா, மாவட்ட கருவூல அலுவலர் சண்முகனந்தன், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கருவூல அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள் மற்றும் உதவி கருவூல அலுவலர்கள் பங்கேற்றனர்.


Next Story