கோத்தகிரியில் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணி மும்முரம்


கோத்தகிரியில் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:00 PM GMT (Updated: 14 Nov 2018 8:14 PM GMT)

கோத்தகிரியில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால், தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பச்சை தேயிலை விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலமாக இருப்பதால், தேயிலை கொழுந்துகள் கருகி விடுகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.

இதனை தவிர்க்க நீராதாரம் உள்ள பகுதிகளில் இருந்து ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீரை பாய்ச்சியும், தேயிலை செடிகளின் மீது சருகுகள் மற்றும் தாகைகளை பரப்பியும் பனிப்பொழிவில் இருந்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். நீராதாரம் இல்லாத மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகளை பாதுகாக்க கவாத்து செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி எந்திரம் மூலம் மேல் கவாத்து மற்றும் அடி கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

கோத்தகிரி பகுதியில் தற்போது பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கவாத்து செய்த தேயிலை செடிகளில் கொழுந்துகள் வளர்ந்து முழுமை அடைய 3 மாதங்கள் ஆகும். இதனால் கோடைக்காலத்தில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பதுடன், தரமான தேயிலையும் கிடைக்கும். மேலும் தற்போதைய பனியின் தாக்கதில் இருந்தும் தேயிலை செடிகள் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story