பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி சாவு
கோயம்பேட்டில் பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தான்.
பூந்தமல்லி,
கோயம்பேடு, நெற்குன்றம், விநாயகபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் ஆண்டியப்பன். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகன் ரவிராஜ் (வயது 9). அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். மற்றொரு மகனான சரண்ராஜ் (7), 1–ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆண்டியப்பனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 2 மகன்களையும் ஆண்டியப்பன் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு கடந்த 3–ந் தேதி, சிறுவர்கள் ரவிராஜ், சரண்ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் மாடியில் பட்டாசு வெடித்தனர்.
அப்போது அவர்கள் பற்ற வைத்த ஒரு பட்டாசு வெடிக்காமல் போனது. உடனே சிறுவர்கள் அதனை அருகில் சென்று பார்த்தபோது திடீரென பட்டாசு வெடித்து. இதில் இருவருக்கும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் இருவரையும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கண் பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
அதன்படி ஆண்டியப்பன் தனது மகன்கள் இருவரையும் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சரண்ராஜ் குணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ரவிராஜூம் குணம் அடைந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் ஆண்டியப்பன் தனது 2 மகன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவிராஜூக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவன் மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரவிராஜ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.