எண்ணூரில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
எண்ணூரில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவொற்றியூர்,
எண்ணூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டது.
இதில் கடலரிப்பை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்பு சுவரை அலை இழுத்து சென்றுவிட்டது. இதனால் பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை, பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜெயராமன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஆகியோர் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்ணன், இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மீனவர்கள் சின்ன குப்பம், பெரிய குப்பம் கிராமங்களின் இடையே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கடலரிப்பால் பாதிக்கப்பட்ட எர்ணாவூர் குப்பம், சின்னகுப்பம், பெரிய குப்பம் பகுதிகளில் ரூ.35 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.