விழுப்புரம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம், ஆசிரியர் நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்ததோடு, வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? எனவும் கழிவுநீர் வாய்க்கால்கள், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்வையிட்டார்.
அப்போது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ– மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர்நல அலுவலர் ராஜா, விழுப்புரம் தாசில்தார் சையத்மெகமூத், பணி ஆய்வாளர் ஹரிகரன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணன், செல்வராஜ், புகழேந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.