‘கஜா’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
‘கஜா’ புயலை எதிர்கொள்வதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
வங்க கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயலை எதிர்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்டத்தின் கடலோர பகுதிகளான பொம்மையார்பாளையம், சின்னமுதலியார்சாவடி, பனிச்சமேடு, தந்திராயன்குப்பம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிக்காக கொண்டு வரப்பட்ட உபகரணங்களை நேற்று மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரியும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மீட்பு உபகரணங்களை பார்வையிட்ட அவர், மீட்பு குழுவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு எந்த நேரத்திலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களையும், கடற்கரை பகுதிகளையும், சுனாமி குடியிருப்புகளையும் கண்காணிப்பு அதிகாரி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்எச்சரிக்கை குறித்து மீனவ மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது அரசின் மறு உத்தரவு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், வருவாய் அலுவலர் பிரியா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர்கள் சுந்தரேசன், ராஜா, தாசில்தார்கள் தனலட்சுமி, ஜோதிவேல், கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, தேவராஜ், சுரேஷ்குமார், செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.