திருச்சுழி அருகே கலெக்டரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டில் மக்கள் கலெக்டரை முற்றுகையிட்டனர்.
திருச்சுழி,
திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சிவஞானம் கலந்து கொண்டு 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களது துறைகளில் உள்ள நலத்திட்டங்களை கூறி கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் பின்புறமாக வந்த கிராம மக்கள் சிலர் கலெக்டர் முற்றுகையிட்டனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிராம மக்கள் கூறும்போது, திருச்சுழி அருகே மேலகண்டமங்கலத்தில் சித்தலகுண்டை சேர்ந்த சிலர் நபர்கள் மது அருந்துவதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள இளைஞர்கள் மது அருந்தியவர்களை தாக்கியுள்ளனர். இதனால் 2 கிராம இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக சித்தலகுண்டை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிந்து 7 பேரை கைது செய்தனர். மேலும் பலரை கைது செய்வதற்காக இரவு நேரத்தில் போலீசார் வீடுகளில் கதவை தட்டுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் ஆண்கள் எவரும் வீட்டில் தங்குவதில்லை. பெண்கள் அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதில் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
பின்னர் கலெக்டர் சிவஞானம், கிராம மக்களிடம் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறினார். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.