‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி ரூ.80 கோடியில் சுத்தப்படுத்த திட்டம்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி ரூ.80 கோடியில் சுத்தப்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 5:00 AM IST (Updated: 15 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி ரூ.80 கோடியில் சுத்தப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி ரூ.80 கோடியில் சுத்தப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அகழியின் மேல்பகுதியில் நடைபாதை, கலாசார மையம், விளக்க கூடமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ரூ.1,289 கோடி மதிப்பீட்டில் 12 விதமான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தில் நகரை அழகுபடுத்தும் பணி, பாலங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு கட்டமாக தஞ்சை பெரியகோவில் பகுதியில் உள்ள அகழியை சுத்தப்படுத்தி பணிகள் மேற்கொள்ள ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீட்டை மாநகராட்சி தயார் செய்து அனுப்பி உள்ளது. தஞ்சை பெரியகோவில் பின்பகுதியில் கல்லணைக்கால்வாய் கரையில் இருந்து அகழி தொடங்கி பெரியகோவிலின் வடக்குபகுதி கோட்டைசுவரை ஒட்டி வந்து திருவையாறு செல்லும் சாலை வரை உள்ளது. இந்த அகழியின் தூரம் 4.25 கிலோ மீட்டர் ஆகும். இந்த அகழிக்கு கல்லணைக்கால் வாயில் இருந்து தண்ணீர் விடப்படுகிறது.

கல்லணை கால்வாய் தண்ணீர் மற்றும் வடகிழக்குப்பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர் என 6 மாத காலத்துக்கு அகழியில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இந்த அகழியை சுத்தப்படுத்தி இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. அதில் புல்தரைகள், படித்துறைகள் சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் இந்த நடைபாதையின் ஓரத்தில் கைவினைகலைஞர்களின் தயாரிப்புகள், கலாசார மையங்கள், பெரியகோவில் பற்றிய விளக்க கூடம் போன்றவையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து அகழி சுத்தப்படுத்தப்பட்டு நீர் நிரப்பிய பின்னர் அதில் படகு சவாரி விடப்படுகிறது. இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடு இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பெரியகோவில் கோட்டை சுவருக்குள் உள்ள சுற்றுலா தலமாக விளங்கும் தஞ்சை சிவகங்கை பூங்காவும் மேம்படுத்தப்படுகிறது. இந்த பூங்கா மற்றும் அதில் உள்ள சிவகங்கை குளம் ஆகியவையும் புனரமைக்கப்படுகின்றன. சிவகங்கை பூங்காவில் புதிய ரெயில், செயற்கை நீரூற்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் போன்றவை சீரமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிவகங்கை பூங்காவில் ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக வருகிற 23-ந் தேதி டெண்டர் விடப்படுகிறது. அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாநகரில் உள்ள ராஜப்பா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களிலும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர அய்யன்குளம், சாமந்தான் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களும் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான டெண்டர்களும் விரைவில் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story