இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என பரமக்குடியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி முகவர்களை ஆய்வு செய்வதற்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து சேதுபதி நகர், காட்டுப்பரமக்குடி, சந்தக்கடை, சுப்பிரமணியசாமி தெரு உள்பட பல்வேறு வார்டுகளில் நியமிக்கப்பட்டிருந்த முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத், மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்றார்.
பின்னர் முன்னாள் அமைச்சரும், தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த தி.மு.க. ஆட்சிகளின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிஉள்ளோம். நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் தந்தது தி.மு.க. ஆட்சியில் தான்.
நெசவாளர்களுக்கு அதிகளவு ரிபேட் வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான். உழவர் சந்தை, பசும்பொன் தேவருக்கு நினைவு மண்டபம், சேது சமுத்திர திட்டம் போன்ற நல்ல திட்டங்களை தி.மு.க. செயல்படுத்திஉள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அ.திமு.க. அரசால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். கடந்த தேர்தல்களை போல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தடுக்கப்படும். வாக்காளர்களும் பணத்திற்கு விலை போகக்கூடாது. சூரியனில் ஓட்டு போட்டால் தான் தமிழகம் செழிக்கும். தொழில் வளம் சிறக்கும்.
இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. ஆட்சி அமைக்கும். அனைத்து கட்சிகளும் பணத்தை மட்டுமே நம்பியுள்ளனர். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் நீதி தேவதை நல்ல தீர்ப்பை வழங்குவார்.
அகில இந்திய அரசியலில் யாருடன் எந்த நேரத்தில் கூட்டணி வைக்கலாம் என்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் மத்தியில் ஆளும் மோடியின் ரிமோட் ஆட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.