கஞ்சா விற்பதாக படம் எடுத்து பெயிண்டரிடம் பணம் கேட்டு மிரட்டல்


கஞ்சா விற்பதாக படம் எடுத்து பெயிண்டரிடம் பணம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 Nov 2018 5:33 AM IST (Updated: 15 Nov 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பதாக படம் எடுத்து பெயிண்டரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவுண்டன்பாளையம் கருமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விக்கி (வயது 19) பெயிண்டர். இவர் தனது நண்பருடன் தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அங்கு சிகரெட் பிடித்து கொண்டிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பவன்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன்குமார், விக்கியிடம் தன்னிடம் 100 கஞ்சா பொட்டலங்கள் உள்ளது. இதனை விற்பனை செய்து தரும்படி கூறியுள்ளார். இதற்கு விக்கி மறுத்துள்ளார். பின்னர் அந்த கஞ்சா பொட்டலங்களை கீழே கொட்டி விட்டு அதனை எடுத்து தருமாறு கூறியுள்ளார். உடனே அவரும் அதை எடுத்துக்கொடுத்துள்ளார். அப்போது அதை பவன்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை விக்கியிடம் போட்டு காண்பித்து ‘ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும். இல்லையென்றால் நீ கஞ்சா விற்பனை செய்வதாக ஆதாரத்துடன் போலீசில் புகார் செய்வேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்கி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் பவன்குமார், விக்கிக்கு போன் செய்து உடனடியாக பணத்தை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

இந்தநிலையில் விக்கியும், அவரது தாயாரும் ரூ.2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பவன்குமார் கூறிய இடத்திற்கு சென்றனர். அங்கு ரூ.2 ஆயிரத்தை பவன்குமாரிடம் கொடுத்து போலீசில் சிக்க வைத்து விடாதீர்கள் எனக்கேட்டு தாயும், மகனும் கெஞ்சினர். ஆனால் பவன்குமாரோ எனக்கு பிச்சையா போடுகின்றீர்கள் எனக்கேட்டு ரூ.2 ஆயிரத்தை வாங்க மறுத்து, ரூ.30 ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகனை போலீசில் சிக்க வைப்பேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் விக்கி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story