பொதுத்துறை மானியத்துக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்தபின் கவர்னர் தடுப்பது கிரிமினல் குற்றம் - லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தகவல்
பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்துக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் கவர்னர் தடுப்பது கிரிமினல் குற்றம் என்று லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
புதுச்சேரி,
முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அரசு நிறுவனங்களுக்கு மானியம் அல்லது கொடை வழங்குவது தொடர்பான நிதி அனுமதி விதி 20 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஏதே இந்த வருடம் மட்டும் புதிதாக வந்ததல்ல. கவர்னர் கிரண்பெடி கூறி இருப்பது போன்று இந்த சட்ட விதிமுறைகள் இன்றோ நேற்றோ வந்ததல்ல. தற்போது உள்ள நிதி செயலாளர்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவும் உள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இப்படி செய்யாதவர்கள் யாரும் இல்லை.
மத்திய அரசும், மாநில அரசும் நிதி அனுமதி மற்றும் நிதி சம்பந்தமான சட்டங்களை மாற்றாத நிலையில் இதுவரை புதுச்சேரியின் பல்வேறு முதல்–அமைச்சர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்த இந்த மானியம் அளிப்பு, சம்பளம் உள்பட தரப்பட வேண்டிய விதிமுறைகள் எதனையும் மாற்றாமல், கவர்னர் கிரண்பெடி தனக்கு மட்டுமே அதிகாரம் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறார்.
இந்த நிதி அனுமதி விதிகள் தொடர்பாக இதற்கு முன்பு இருந்த கவர்னர்களுக்கு தெரியாதா? அல்லது இதற்கு முன்பு இருந்த அதிகாரிகளுக்கும், தற்போதைய அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா? மக்களுக்கான செலவினங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக அரசியல் சிந்தனையான உயர்ந்த அரசியலமைப்பு எண்ணத்தை பெரும்பான்மை மக்களின் ஆட்சிக்கு விரோதமாக தடுப்பதும், தர மறுப்பதும் அதிகார போதையில்லையா? மக்களுக்கான அரசுதான் இருக்கவேண்டுமே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்பு விதிகளுக்காக மக்களும், ஊழியர்களும் இல்லை என்பதை கவர்னர் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்?
இதே நிதித்துறை செயலாளர் கடந்த ஆட்சியில் கவர்னருக்கு கோப்பினை அனுப்பாமல் மானியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு ஒப்புதல்கள் ஆயிரம் தடவைக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை தகவல் அறியும் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கேட்டு பார்க்கலாம். தணிக்கை அறிக்கையில் இது சம்பந்தமாக பல விஷயம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மக்களின் சவுகரியத்துக்குத்தான் விதி. விதிக்காக மக்கள் இல்லை. விதியிலும் கோளாறு இல்லை. விரோத துரோக கண்ணோட்டம்தான் மாறவேண்டும். இதே விதிதான் டெல்லியிலும் உள்ளது. டெல்லியில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்படுவதில்லையே? மக்களிடம் தோற்ற ஒரு நபரால்தான் மக்களை விரோதமாக பார்க்கவும், பழிதீர்க்கவும்தான் இப்படி செயல்பட முடியும். புதுச்சேரியில் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் திட்டச்செலவு மூலம் அளிக்கப்படுகிறது.
அனைத்து திட்டங்களும் திட்டக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டவைகள். மேலும் இந்த மாநிலத்தின் நிதி ஒதுக்க மசோதா மூலம் சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டவை. இந்த திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டவை. சட்டமன்ற ஒப்புதல் கொடுக்கப்பட்ட பிறகு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த மானியத்துக்கு ஒப்புதல் அளித்த பின்பும், இதனை கவர்னர் தடுப்பது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும். அதற்கான தண்டனையை கவர்னர் அனுபவித்தே ஆகவேண்டும்.
15 ஆயிரம் அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கவர்னரின் அடாவடி தனத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். பழி ஓரிடம் பாவம் ஓரிடமா? கவர்னர் விதியை காட்டி சதி செய்ய நினைத்தால் தலை விதி வேறு மாதிரியாகிவிடும் என பாதிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தங்கள் பொறுமையை மீறும் சூழ்நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.