திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்


திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 15 Nov 2018 9:52 AM IST (Updated: 15 Nov 2018 9:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. 7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள், தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி

மதியம் 3.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் எழுந்தருளி, சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரத வீதி சந்திப்பில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமானை தெய்வானை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டு ஆடைகள், மாலைகள் மாற்றப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர், அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.

திருக்கல்யாணம்

பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி மற்றும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

இன்று, பட்டினபிரவேசம்

8-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று காலையில் சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எட்டயபுரம்

இதேபோன்று கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கதிரேசன் கோவில் மலையில் உள்ள கதிர்வேல் முருகன் கோவில், சங்கரேசுவரி அம்பாள் புற்று கோவில், எட்டயபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

Next Story