நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு


நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு
x
தினத்தந்தி 15 Nov 2018 4:32 AM GMT (Updated: 15 Nov 2018 4:32 AM GMT)

நெல்லையில் காரில் கடத்தப்பட்ட மேடை பாடகரை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று மீட்டனர். இது தொடர்பாக மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் காரில் கடத்தப்பட்ட மேடை பாடகரை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று மீட்டனர். இது தொடர்பாக மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேடை பாடகர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் முத்துப்பாண்டி (வயது 31), மேடை பாடகர். இவருக்கும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த குத்தாலிங்கத்தின் மகள் வேலம்மாளுக்கும் (30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் பிரிந்து உள்ளனர். பின்னர் பெண் வீட்டார் தரப்பில் கணவன்-மனைவியை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முத்துப்பாண்டி இதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

காரில் கடத்தல்

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கச்சேரியில் முத்துப்பாண்டி கலந்து கொண்டு பாடினார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த முத்துப்பாண்டியை, அவருடைய மனைவியின் உறவினர்கள் சிலர் சந்தித்து பேசி உள்ளனர்.

பின்னர் அவரை, 4 பேர் சேர்ந்து ஒரு காரில் கடத்தி மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தனர். தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு முத்துப்பாண்டியை சரமாரியாக தாக்கினர்.

போலீசார் உஷார்

அப்போது அந்த வழியாக தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முத்துப்பாண்டியை 4 பேர் தாக்கிக் கொண்டிருப்பதை கண்டு அருகில் சென்றனர். அதற்குள் அந்த கும்பல் முத்துப்பாண்டியை மீண்டும் காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு, வேகமாக தப்பிச்சென்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த காரை பின் தொடர்ந்ததோடு, மைக் மூலம் கார் எண்ணை குறிப்பிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

சுற்றி வளைத்தனர்

இதற்கிடையே வண்ணார்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிட்ட அந்த காரை கண்டனர். அவர்களும் அந்த காரை பின்தொடர்ந்து தங்களது வாகனங்களில் சினிமா பாணியில் விரட்டி சென்றனர்.

மாலை 6 மணியளவில் அந்த கார் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக ரோடு வழியாக சென்றது. அங்கு போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த கும்பல் கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறம் சுற்றுச்சுவர் மீது காரை மோதி நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடினர்.

அதிரடி மீட்பு

இதையடுத்து போலீசார் காரில் இருந்த முத்துப்பாண்டியை அதிரடியாக மீட்டனர். மேலும் காரில் இருந்து ஓட்டம் பிடித்தவர்களை துரத்தி சென்றனர். அவர்கள் கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் ஏறி குதித்து, மற்றொரு வழியாக வெளியே ஓடினர். இதில் 2 பேர் மட்டும் கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அங்கிருந்து ஒரு டவுன் பஸ்சில் ஏறி தப்ப முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி பஸ்சுக்குள் இருந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவர்களை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த உடையார் (39), சிங்கிகுளத்தை சேர்ந்த அய்யப்பன் (42) என்பது தெரியவந்தது. இவர்கள் முத்துப்பாண்டி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாததால் கடத்திச்சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடையார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தாக்குதலில் காயம் அடைந்திருந்த முத்துப்பாண்டியை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் புஷ்பராஜ் உள்பட மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் போலீசார் கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த சம்பவம் நெல்லையில் நேற்று மாலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story