திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பட்டுபோன மரங்களில் சிற்பம் செய்யும் பணி
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பட்டுபோன மரங்களில் சிற்பம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். சாமி தரிசனம் செல்லும் பெரும்பாலான பக்தர்கள் நகரின் மைய பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
கிரிவலப் பாதையில் மக்கள் நடந்து செல்லும் வழியில் இருபுறங்களிலும் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்படுகிறது. இதில் புளிய மரம் உள்பட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கிரிவலப் பாதையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மூலமும் கிரிவலப் பாதையில் கூடுதல் மரங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிவலப் பாதையில் உள்ள மரங்கள் ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சி நடைபெறுவதாகவும், இதனால் பல மரங்கள் பட்டு போய் காணப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கும், வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டார்.
அந்த ஆய்வில் கிரிவலப் பாதையில் உள்ள மரங்களில் 62 மரங்கள் பட்டு போய் காணப்படுவதாகவும், அதுவும் சில வகை பூச்சிகளால் தான் அவை பட்டு போய் உள்ளதாகவும் தெரியவந்தது. பட்டு போன மரங்களை அகற்ற மனமில்லாத கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பசுமை நிறைந்த கிரிவலப் பாதையை மேலும் அழகூட்ட புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார். அதாவது வெளிநாடுகளில் ஒரு பெரிய மரம் பட்டுபோனால் அதனை அகற்றாமல் அதில் ஒரு சிற்பம் செய்து பராமரிப்பார்கள்.
அதுபோன்று இந்த 62 மரங்களிலும் சிற்பங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மாமல்லபுரத்தை சேர்ந்த மதுரை மணிகண்டராஜா என்ற மர சிற்பம் செய்யும் ஸ்தபதி இந்த பணியில் ஈடுபட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
நான் சிற்ப கலைக்கான பட்டபடிப்பு பயன்று உள்ளேன். பட்டுபோன மரங்களை சிற்பங்களாக செதுக்கி அதனை சில கண்காட்சிகளில் வைத்து உள்ளேன். இதனை அறிந்த கலெக்டர் கிரிவலப் பாதையில் பட்டு போய் உள்ள 62 மரங்களில் மர சிற்பங்கள் செய்ய என்னை அணுகினார்.
இதில் இயற்கை காட்சி, பறவைகள், ஊர்ந்து செல்லும் விலங்கினங்கள் போன்றவை செதுக்கப்பட உள்ளது. இவை மரங்களை துண்டுகளாக வெட்டி வைத்து செதுக்குவது அல்ல. நிற்கும் மரத்தில் அப்படியே அவற்றின் நீளம், அகலம் ஆகியவற்றை கொண்டு எந்தவகையான சிற்பம் செதுக்கினால் நன்றாக இருக்கும் என்று பார்வையிடப்பட்டு அதற்கு ஏற்ப சிற்பங்கள் செதுக்கப்படும். இதுபோன்ற மர சிற்பங்கள் எனக்கு தெரிந்து தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. இதுவே தமிழகத்தில் முதல் முறையாகும். ஏனென்றால் இதற்கு யாரும் பணம் செலவழிக்க விரும்ப மாட்டார்கள்.
மர சிற்பங்கள் குறித்து அறிந்த கலெக்டர் அந்த புதிய முயற்சியை கையில் எடுத்த உள்ளார். ஒரு மர சிற்பம் செய்ய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். ஆனால் தீபத் திருவிழாவிற்கு முன்பு 3 மர சிற்பங்கள் செய்து கொடுக்க கேட்டு கொண்டு உள்ளார். அதற்கான பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.