‘கஜா’ புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் கடற்கரைக்கு செல்ல தடை
கஜா புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
கடலூர்,
வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து கடலூர் துறைமுகம் முகத்துவாரம் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. வழக்கத்தை விட சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள், ஆக்ரோஷத்துடன் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
ராட்சத அலை காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று உரசியபடி அசைந்தாடியதை பார்க்க முடிந்தது. மேலும் கடல் சீற்றத்தால் துறைமுகத்தின் முகத்துவாரத்தையொட்டியுள்ள உப்பனாற்றில் நீர் மட்டம் வழக்கத்தை விட உயர்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது.
அதேபோல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலை வழக்கமான இடத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு கரையை நோக்கி சீறிப்பாய்ந்தது. இதனால் கடலோர பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு மண் திட்டு போன்று காணப்பட்டது.
கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதற்கு போலீசார் தடைவிதித்தனர். ஆர்வமிகுதியால் கடற்கரைக்கு வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் கடற்கரையோரம் ரோந்து சுற்றியபடியும், ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்ததையும் பார்க்க முடிந்தது. கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் சில்வர் பீச் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவது வழக்கம். மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க உள்ளூர் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் துறைமுகத்துக்கு வந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்வார்கள்.
ஆனால் கஜா புயல் உருவானதை அடுத்து மீன்வளத்துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 11-ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வரத்து இல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால் இதை நம்பியுள்ள மீன்பிடி தொழிலாளர்கள், ஐஸ்கட்டி உற்பதி தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
Related Tags :
Next Story