ஊட்டி பிஷப் டவுன் பகுதியில் சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
ஊட்டி பிஷப் டவுன் பகுதியில் சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஊட்டி,
ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பிஷப் டவுன் என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு எல்க்ஹில்லில் இருந்து செல்லும் மண் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்படாததால், மழை காலங்களில் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மண் சாலையில் ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன. மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. அந்த பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் கரடு, முரடான சாலையில் நடந்து தினமும் வேலைகளுக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பிஷப் டவுன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல குண்டும், குழியுமான மண் சாலையில் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். பலத்த மழை பெய்யும்போது மண் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடும்.
அப்போது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அவசரத்துக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த சாலையில் செல்லும்போது தடுமாறி வழுக்கி விழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் மண் சாலையில் இருந்து கீழே கவிழ்ந்து இருக்கிறது. சாலையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாலும், தடுப்புச்சுவர் கட்டப்படாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
எல்க்ஹில் பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து பிஷப் டவுன் பகுதிக்கு வரும் சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் இன்டர்லாக் கற்கள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story