தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்ததால் மாணவி தற்கொலை மாணவர்கள் போராட்டம்


தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்ததால் மாணவி தற்கொலை மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 11:40 PM IST)
t-max-icont-min-icon

தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.

சரவணம்பட்டி,

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கலைஅறிவியல் கல்லூரியில் கணினி தொழில்நுட்பத் துறையில் சர்மிளா(வயது19) என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சர்மிளா காப்பி அடித்ததை தேர்வு கூட கண்காணிப்பாளர் கண்டுபிடித்து கண்டித்துள்ளார். மேலும் அவரிடம் எழுதி வாங்கியதாகவும் கூறப் படுகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி சர்மிளா கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பஸ்சில் சென்று நீலாம்பூர் ரோட்டில் இறங்கினார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சக மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், மாணவி சர்மிளாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘சர்மிளாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளின் தற்கொலைக்கு காரணம் தற்போதுள்ள கல்வி முறையே ஆகும். வாழ்க்கைக்கு உதவும் வகையில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி தற்கொலை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story